பூரணக்கண்ணி


பூரணக்கண்ணி
பொன்போல் மணிபோற் புறம்பிற் பலபொருட்போ
லென்போலிலங்கிநின்றா யேகபரி பூரணமே
(1)
ஆடாத கூத்தெல்லா மாடிப்பரதவிக்கு
மூடமன தோடலைய முற்றுமோ பூரணமே
(2)
எள்ளுக்ககுளென்ணெயென வெங்கெங்குந்தானாகி
யுள்ளுக்குளின்னமுதொத்தூறிநின்றாய் பூரணமே
(3)
ஆசைக் கொடும்பாச மற்றுவிடாயாறிப்
பேசாதவாழ்வு பெறுவேனொ பூரணமே
(4)
கிட்டவிருந்தெல்லாங் கேட்டிருந்துங் கேளார்போற்
கட்டவினைக்காளாகக் காட்டியதேன் பூரணமே
(5)
எல்லாங்கவர்ந்து நின்று மென்னைக் கவருகில்லாய்
பொல்லேன் பிழையைப் பொறுப்பதென்று பூரணமே
(6)
ஆங்காரப்பேய்வந் ததட்டிப் பிதற்றுதெல்லாம்
போங்காலமென்று புகலுவாய் பூரணமே
(7)
எல்லாரும் வாழ்கின்றா ரேழையொருவன் மட்டும்
புல்லறிவனாகிப் புலம்புகின்றேன் பூரணமே
(8)
கள்ளக்கொடும்புலனுங் காமாதிமெய்க்குலமுந்
துள்ளுமனமுந் துணையாமோ பூரணமே
(9)
ஆய்ந்து மலரோனளித்த வாயுளெல்லாமிக்காமப்
பேய்க்குவிருந்திட்டலையும் பெற்றியென்னே பூரணமே
(10)
அந்திப்பிறைநுதலார்க் காவலா யோர்மரம்போற்
புந்திகெட்டு நின்றதெல்லாம் போதாதோ பூரணமே
(11)
ஆசாரநேசமுள்ள தத்தனையுமாற்றியபுன்
வாசனைப்பேயென்னை மறக்குமோ பூரணமே
(12)
நினையாச் சனன நிகழக்காய் காய்க்கும்
வினைமாமரவேர்கள் வீவதென்று பூரணமே
(13)
பார்ப்பதார் பார்த்திங்கு பற்றுபொருளியாதுமெல்ல
வீர்ப்பதாரெல்லா மியம்புவாய் பூரணமே
(14)
தள்ளரிபாசத் தளைபோய்ப்பரானந்தக்
கொள்ளைவெள்ளமூழ்கிக் குளிப்பேனோ பூரணமே
(15)
கற்றிருந்துங் கேட்டதெல்லாங் காட்டுத்கெரித்த நிலா
இற்றைவரை யென்னபல னெய்தினேன் பூரணமே
(16)
வள்ளமுலைப்பால்குடிப்பான் வந்து முந்தி பற்றியழும்
பிள்ளைதனைத்தாய்வெறுக்கும் பெற்றியென்னே பூரணமே
(17)
நெஞ்சறியாப்பேயாட்டு நீலிகற்றநாடகமு
மஞ்சாது நெஞ்சமிங்கே யாடுவதேன் பூரணமே
(18)
பொல்லாப்புலன்களோடு போந்திங் குழல்வதினிற்
கல்லாய்ப்பிறக்கினன்மை கண்டிருப்பேன் பூரணமே
(19)
ஆடுமுயிருமதை நோக்குமோரறிவுங்
கூடஸ்தருநீயாய்க் கூறலாம் பூரணமே
(20)
தூரமுள்ள தல்லவெளி தோன்றாப்பொருளுமல்ல
ஆருமுணராதலைவதேன் பூரணமே
(21)
என்னைவேறாக்கி யிந்த வீடணையில்விட்டதுவு
முன்னைவினைதானோ மொழிகுவாய் பூரணமே
(22)
முந்தைவினைக் கொடியன் மூர்க்கமெல்லாம் பேதைமனத்
தந்தமட்டோ வப்பாலுக்கப்பாலோ பூரணமே
(23)
பக்கத்துலகர் வினைப் பாழனிவ னென்றுரைக்குந்
துக்கத்தை யாரோடு சொல்லுவேன் பூரணமே
(24)
நாற்றச்சரீரமதை நானாய்க்கருதியலைந்
தாற்றநாட்போக்கி விட்டேனையையோ பூரணமே
(25)
தேடாத்திரவியமே தேவருண்ணாத்தெள்ளமுதே
வாடாமலரே முன்வாராயோ பூரணமே
(26)
எங்கும் நிறைந்தவுன்னை யேத்தவறியாமலையோ
இங்குமட்டுமுள்ளாயென் றெண்ணினேன் பூரணமே
(27)
மெய்கண்டாற்பொய்மை வெருண்டோடுமென்பதெல்லாம்
பொய்மட்டுமல்ல வெறும்பொய்யாச்சே பூரணமே
(28)
காமக்கொடும் புலையன்கட்டோடெனைக்கெடுத்து
நாமமறச்செய்ய நடிக்கின்றான் பூரணமே
(29)
மூண்டகுடும்பத்தின் மூத்தோனென்றூர்மதிக்கப்
பூண்டிருந்தகோலமெல்லாம் போதாதோ பூரணமே
(30)
ஆயத்தார் போலமறித்தன்றன்று கூலிகொளுங்
காயக்கொடுமை கடப்பேனோ பூரணமே
(31)
வட்டவார் பூண்மலையார் மையலாலன்றுமுதற்
பட்டதெல்லா மெண்ணிப்பதைக்கின்றேன் பூரணமே
(32)
பத்திநெறி சென்றறியேன் பண்பாடக் கற்றறியேன்
முத்திநெறிக்கெவ்வாறு முன்னுகின்றேன் பூரணமே
(33)
சிந்துகனல்விழியான்றீய நமன்கோபமெல்லா
மிந்தவுடன் மட்டல்லாலென்செய்யும் பூரணமே
(34)
கோடைக்குருந்தேபோற் கோலங்குலையவென்னை
வாடவைப்பதெல்லாம் வழக்காமோ பூரணமே
(35)
காய் மும்மலப்பிணக்கின் கட்டெல்லாம்வெந்தொழிய
வாய்திறந்தோர்வார்த்தை வழங்கலென்று பூரணமே
(36)
ஆர்க்குநமன்குறும் புக்கஞ்சாதயராது
பேர்க்குடியாய் நானும் பிழைப்பேனோ பூரணமே
(37)
கிட்டிவந்து சொன்னபடி கேட்கவந்தபேதை நெஞ்சைக்
கட்டவறியாது கலங்குகின்றேன் பூரணமே
(38)
ஊன்விரும்புநாய்க்காயுனது திருவாய்மலர்ந்தா
லேனோரிகழ்வரென்ன வெண்ணினையோ பூரணமே
(39)
வீட்டுப்புறவின்வலிமேம் பட்டிருக்கிலன்றோ
காட்டுப்புறவையெல்லாங் கட்டலாம் பூரணமே
(40)
ஊரார்களொப்புவண்ணமுண்டு டுத்துவாழ்பவனு
மாறாகநொந்திங்கழுகின்றேன் பூரணமே
(41)
எட்டுக் கொடாமலென்னோடேன்றதெல்லாம் பார்க்கும் வினைக்
கட்டுக்குலைந்திடவுங் காண்பேனோ பூரணமே
(42)
நீயுரைக்கச்சற்று நினைக்காயேல்மற்றியாவர்
வாயுரைக்கக் கேட்டுமயல்தவிர்வேன் பூரணமே
(43)
கோனாயொருகுடைக்கீழ்க் கோலோச்சுநீசலித்தோ
நானெனற் கோவலிமைநல்கினாய் பூரணமே
(44)
வாடுவதும்பாடுவதுமாறாது கண்ணீரா
றோடுவதுமுள்ளபடிக் குண்மையன்றோ பூரணமே
(45)
ஆடைமணிப்பூணு மாடரங்குமாளிகையுங்
கூடவருந்துணையோ கூறுவாய் பூரணமே
(46)
பாமரனாய்வாழ்ந்தாலும்  பண்புண்டஃதைவிட்டுத்
தாமரையினீர் போற்றவிக்கின்றேன் பூரணமே
(47)
நல்லார்கயவரிவர் நண்பரிவரென்னாமல்
எல்லோருநீ யென்றிருப்பேனோ பூரணமே
(48)
மானார் தமைவெறுத்து மற்றுமவாப்புல்லவைத்தாய்
ஆனாலுமென் கொடுமையார்க்குமில்லை பூரணமே
(49)
தக்கதருவிடத்தைச்சார்ந்து மிடிதீரார்போற்
பக்கத்திருந்தும் பதைக்கின்றேன் பூரணமே
(50)
எத்தனைக்குக் கிட்டவுள்ளதென்றெளிதிற் சொல்லு(மொழி)
யத்தனைக்குந்தூரமுள்ள தாகின்றாய் பூரணமே
(51)
கையாவமுதே கணுவிலாச்செங்கரும்பே
செய்யாதசித்திரமே தேனேயென் பூரணமே
(52)
சான்றாய்த்தமரா யென்றம்பியராய்முன்னோராய்
ஈன்றாளுமாகி நின்றாயேகபரி பூரணமே
(53)
வெம்மாயப் பேயுமிகுமாணவச்செறுக்குஞ்
சும்மாவிருக்கி றொலைந்துவிடும் பூரணமே
(54)
அன்பென்னுநெய்விட்டறி வென்னுநூற்றிரியிட்
டென்பரமஞானவிளக்கேற்றுவனோ பூரணமே
(55)
குன்றுங்கடலுமுள கோணமும் போய்வீழுமன
மொன்றுமட்மே மாண்டுவிட்டாலொப்பில்லை பூரணமே
(56)
உற்றுணரார் மூடவுலகினைவிட்டுன்னருளைப்
;பற்றுவதற்கென்ன தவம்பண்ணினனோ பூரணமே
(57)
நூலாலுணர்ந்து நல்லநுண்ணறிவாற்காண்பதல்லாற்
காலானடந்தவரோ காணவல்லார் பூரணமே
(58)
மின்னனையபொய்யுடலை மெய்யென்றிருப்போர்க
ளென்னபயனெய்து வரோயானறியேன் பூரணமே
(59)
வாக்கின்றிறனும் வலிபெற்றதிண்டோளு
மார்க்குகமத்தீயன் முன்போராற்றுமோ பூரணமே
(60)
வேகமெனுங்கோவீந்து வெவ்வினையாங்கூலிகொடுத்
தாகச்சுமைக்கு நல்லவாட்பிடித்தாய் பூரணமே
(61)
ஊட்டியிங்கு வாழவைக்கவுற்றவனாய் நீயிருந்துந்
தேட்டநினைந்திங்கு திரிகின்றேன் பூரணமே
(62)
மையன்மனையார்கள் மக்கள்சுற்றமுள்ளதெல்லாம்
பொய்யென் றுகண்டும் புகுவதேன் பூரணமே
(63)
கையிலமுதைக் கமர்வெடிப்பில் விட்டார்போ
லையமறந்தம் பலத்திலானேனே பூரணமே
(64)
துட்டமனத்தினுக்குஞ் சொல்லுமுணர்வினுக்கு
மெட்டாததொன்றதின் பேரென்சொலலாம் பூரணமே
(65)
ஊனாறுடலாச்சுள மாச்சறிவாச்சு
நானென்பதெங்கே நவிலுவாய் பூரணமே
(66)
காமக்குரோ தமெனுங்கான் வேட்டைக்காரரெல்லா
மூமைமனத்துள்ளுறைபவரோ பூரணமே
(67)
ஆணவப்பேய்மற்றிரு பேயாக்ஷியரசுசெங்கோல்
பூணுமிடமியாது புகலுவாய் பூரணமே
(68)
கோபனொடுடம்பன் கொடியவுதாசீனனுக்குந்
தாபரமிம் மூடமனந்தானோசொல் பூரணமே
(69)
முன்னஞ்சிலகாலமொய்ம் பழித்தகாமனென்மே
லின்னங்கழையெடுத்தாலென் செய்வேன் பூரணமே
(70)
காயாபுரியாக்ஷி காமனுக்கே யென்றுமுன்னம்
வாயாரச் சொல்லிநன்னீர் வார்த்தனையோ பூரணமே
(71)
அன்பொன்றிருக்கிலன் றோவாறான கண்ணீர்விட்
டென்புருகிப்பாடல் செய்வேனேகபரி பூரணமே
(72)
நல்லோர்கள் சென்றநெறி நானடக்கினல்லாது
புல்லறிவாலெந்தமட்டும் போகவல்லேன் பூரணமே
(73)
வான்மறைகள் காணாமலரடியைக்காண்பனென
வேனிந்தப்பேதையிங்ங னெண்ணுகின்றேன் பூரணமே
(74)
நேர்நிலைப்பினிற்க வொட்டா நீண்டகொடுமைம்புலத்தார்
சோரமனராஜனுக் குத்தூதுவரோ பூரணமே
(75)
சிட்டுக்குருவிகளாய்ச் சேர்ந்திருக்குமிக்கூட்டைச்
சுட்டுவிட்டாற்போமென்று யரமெல்லாம் பூரணமே
(76)
வன்னப்புறவேமணிப்புறவே மாங்குயிலே
அன்னப்பெடையே யென்னன்புருவே பூரணமே
(77)
துன்றுஜெனனத்தொடக் கெல்லாம்விட்டொழிந்து
என்றுவிடாயாறி யானிருப்பேன் பூரணமே
(78)
ஊக்கவுயிர்ப்பறவை யோடிவிட்டாலிக்கூட்டைத்
தூக்கிக்கிடத்திச் சுடுவாரே பூரணமே
(79)
என்னெனவோபேசிநின்ற விச்சடலமாண்டதென்னப்
பண்ணியிருந்தழவும் பண்ணுவையோ பூரணமே
(80)
கள்ளமனமென்னுங் கடுங்குரங்கின்சேட்டையினாற்
கிள்ளப்பழுத்தவனங் கெட்டதுவே பூரணமே
(81)
ஏய்ந்த கொடுமைம்புலன் கனிந்தமனக்குரங்கு
பாய்ந்துவிளையாடும் பருங்கோடோ பூரணமே
(82)
நானகைத்துப்பேசிவந்த நாள்போய் நமக்குறும்பன்
றானகைத்துப்பேசியிங் குசாருவனோ பூரணமே
(83)
குஞ்சிச்சிகையான் கொடியபிறைவாளெயிற்றான்
அஞ்சு பெருந்தடியானண்டுவனோ பூரணமே
(84)
மட்டில்லாத் துன்பமுற்றுவாடி நான்றேடு பொருள்
எட்டாப்பழமோ வியம்புவாய் பூரணமே
(85)
பந்தவினைகெட்டுப் பரமசுகவாழ்வுபெற
விந்தஜெனனமதிலில்லையோ பூரணமே
(86)
ஆனாக்கொலைபுரிந்த வாக்கமிலியிவனுக்
கேனாமருள்வமென வெண்ணினையோ பூரணமே
(87)
அம்பனையகண்ணாருக் காளாயான்செய்தபணி
இம்பரிலுமும் பரிலுமியாவர்செய்தார் பூரணமே
(88)
வானவுடுமதிபோல் மாமுகத்தார்மையல்கொண்டு
போனநாள்வந்து பொருந்துமோ பூரணமே
(89)
போதமில்லானூன் விரும்பும் புன்புலையனென்றென்னைக்
கோதிறவத்தோரிகழ்ந்து கூறினரோ பூரணமே
(90)
பக்குவமில்பாழன் முகம்பார்த்தாண்டாலின்னருளுக்
கெக்குறையுமுண்டோவென்றெண்ணுகின்றேன் பூரணமே
(91)
உள்ளப்பேய்மற்றவைகளுன் மத்தங்கொண்டாடும்
துள்ளலெல்லா மாளிற்றுறவாகும் பூரணமே
(92)
உந்துமனமாளாதொளித்துத் துறந்தோர்கள்
சந்திதொறுநின்று தவித்திடுவார் பூரணமே
(93)
ஒட்டுந்தவமிலையேற்குன் பொற்கழல்நாடி
எட்டுமுணர்வுவந்த தெந்தவகை பூரணமே
(94)
கிட்டிய நல்லிவ்வுடற்கோர் கேடுவரினியான்பாவி
பட்டபாடத்தனையும் பாழாமே பூரணமே
(95)
ஆருரையும்வேண்டா நின்னாரருளே வாழ்த்துமென்னு
மோருணர்வேயென்று முதிக்குமா பூரணமே
(96)
கீற்றுப்பிறைநுதலார் கேண்மையினாற்கற்றதெல்லாந்
ஆற்றிற்கரைத்த புளியாச்சுதே பூரணமே
(97)
எக்கோலம்பூண்டாலு மெக்கிரியைசெய்தாலும்
தக்கோர்கள்பெற்ற வொன்றைத்தந்திடுமோ பூரணமே
(98)
சாமானியவடி வந்தன்னைத்தொழுது நிற்கி
லாமான நின்னருளையண்டவைக்கும் பூரணமே
(99)
மந்திரத்துந்தந்திரத்து மற்றுமுள்ளவாசனத்து
மெந்திரத்துமில்லை நின்னையெட்டும்வகை பூரணமே
(100)
அன்பாங்கயிறுகொண்டுன்னம் புயப்பொற்பாதமதை
இன்பாகக் கட்டவல்லார்க்கெட்டிடுவாய் பூரணமே
(101)
எத்துறையிற் சென்றலுமியாதனையற்றிவ்வுடல
மொத்திருக்கினன்னதுவு மோர்தவமாம் பூரணமே
(102)
முத்ததவளநகை மோகமின்னாராவல்கெட
வெத்தனையோ சொல்லிநின்னையேத்தினனே பூரணமே
(103)
வந்தமுகிற்காலூன்றி மாமழையைப்பெய்யவொட்டா
திந்தவினைக்கிந்த வலியார்கொடுத்தார் பூரணமே
(104)
அஞ்சுபுலனா வியடங்குகின்ற தென்னமக்கள்
பஞ்சினிற்பால்தோய்த்தொழுக்கப்பண்ணாதே பூரணமே
(105)
ஐந்துவழிச்சென்றவாப் பறவைமேயந்துகரு
வந்து பந்தமென்னுமகவீனும் பூரணமே
(106)
சொல்லற்கெளிதாகத் தோற்றிவந்தமோனநெறி
சொல்லற் கரிதாய சித்திரமேன் பூரணமே
(107)
மட்டுண்டபூங்குழலார் மையல்வலைப்பட்டுடலம்
வெட்டுண்டார் போற்றுடித்து வீழ்ந்ததுவே பூரணமே
(108)
சொல்லிறந்தவோர்நிலையைச் சொல்லாற்றுதித்தெங்ஙன்
புல்லிடப்போகின்றே னென்போதபரி பூரணமே
(109)
வாழவைப்பான் றாழவைக்கில்மற்றியாரே யுள்ளம்வந்து
பாழன்முகம்பார்க்கும் பரிசுடையார் பூரணமே
(110)
பழுதற்றவித்தின் முளைபற்றியிலைவிட்டுக்
கொழுகொம்பிலாது குறுகியதே பூரணமே
(111)
என்னை நீவேறாக்கியிங்கு வைத்ததாலலவோ
உன்னையான் பஞ்சரித்திங்கோதுகின்றேன் பூரணமே
(112)
சொல்லைக்கடந்தவொரு சூக்ஷியே யென்றன்மனக்
கல்லைக்கரைக்கவழி காட்டியதே பூரணமே
(113)
கன்னலென்றாபா கென்றாகட்டவிழாப்போதென்ற
என்னென்றுவமை சொலியேத்துவேன் பூரணமே
(114)
ஆறகநீர்விட்டழவல்லான் மற்றொன்றுந்
தேறாச்சிறுவனென்ன செய்குவேன் பூரணமே
(115)
தேகத்தை நம்பினர்கடேகமே யாவரென்றால்
ஏகத்தை நம்பினர்களென்னாவார் பூரணமே
(116)
எங்குமுள்ளாய் நீயெனவென்னெண்ண மற்றவக்கணத்தி
லெங்குமுளதாகி யிருக்கின்றாய் பூரணமே
(117)
தேகம்பிரமமெனச் செப்புமிரண்டுரையும்
போகநின்ற புண்ணியரே புண்ணியராம் பூரணமே
(118)
உள்ளும்புறமுமுனை நிறையப்பார்த்தக்காற்
கள்ளமனங்காந்தக் கடத்தூசி பூரணமே
(119)
மாயையுண்டுமென்பவர்க்கே மாயாமயக்கமெல்லா
மாயையிலை யென்பவர்க்குமற்றதில்லை பூரணமே
(120)
கீழிருந்து மாயையில்லை யென்றுகிளத்துவதைப்
பாழ்மாயைமேலிருந்து பார்த்துநகும் பூரணமே
(121)
உன்னுமனம் மாயையிடத்தொப்பிவித்துப்போம் மாயை
நின்னிடத்திலொப்பு வித்தானில்லாது பூரணமே
(122)
தன்னிடத்து மேலானசத்திடத்துவாழ்ந்துவரு
மன்னரையிம் மாயைமயக்காது பூரணமே
(123)
உள்ளதை யெல்லாந் துறந்தோமொன்று மற்றோமென்றோலுந்
துள்ளுமனத் தம்பிதுனைக்குண்டு பூரணமே
(124)
புண்ணாகச்செய்யுமனம் போனாற்பரசுகமென்
றெண்ணாதுனைப் பணியிலேகிவிடும் பூரணமே
(125)
இம்மனத்துக்காதாரமென்ற சுத்தமாமாயை
அம்மாயைகைக்குவரினக் கணம்போம் பூரணமே
(126)
சேட்டையற்றுச் சீதலமாய்த்தீர்ந்தவொருமாமாயை
கேட்டதெல்லாமீயக் கிடைத்ததரு பூரணமே
(127)
வேண்டாரிம் மாயைதனை வேண்டிடவும் வந்துவிடும்
ஆண்டானடிமையென வாக்கிடும் பூரணமே
(128)
பிம்பஞ்சலித்ததெனப் பேசுவர் போலாம்பிரதி
பிம்பஞ்சலித்த தெனப்பேசவரும் பூரணமே
(129)
பிம்பந்தானென்று முத்திபெற்றாலும் பெற்றமெனும்
வன்போதம் போதல் வழக்காகும் பூரணமே
(130)
நாம்பிரமமென்றிடலாம் நற்பிரமந்தன்னிலென்றும்
நாமென்னற்கில்லையென நன்குணரிற் பூரணமே
(131)
பேசாதமோனமதைப் பேசுவதிலேதுபலன்
பேசிடினும் பேசாப்பெருமையதே பூரணமே
(132)
மாயாஜனனமென்பார் மாறாதமுத்தியென்பார்
நேயவெனக்கோ நினக்கோசொல் பூரணமே
(133)
தம்நிலைமையின்ன தெனத்தாம றியாமேலோர்கள்
என்னிலையை நல்லதெனவெண்ணவல்லார் பூரணமே
(134)
தான்றேய்ந்ததனை நெஞ்சந்தான றியாதேஞானம்
என்றேயந்ததென்ன வியம்பிநிற்கும் பூரணமே
(135)
ஞானமெனக்கில்லையென நாளிடையினெஞ்சோய்ந்தா
லானசகஜமதற் கயலாம் பூரணமே
(136)
எல்லாமுமாயையென்று மெல்லாமும்பிரமமென்றுஞ்
சொல்லாததே சகஜசுத்தநிலை பூரணமே
(137)
ஏய்ந்த சகஜநிலை யெய்தியதாய்ச் சொல்லி நெஞ்சம்
தேய்ந்த சமாதி நிலை சேர்ந்திருக்கும் பூரணமே
(138)
உள்ளுக்குட் சீதஜலமோர் தாரையாய்க்குளிர்ந்து
தள்ளுமனந்தேயந்த சமாதிசுகம் பூரணமே
(139)
ஆரோகணக்கெதியாயச் சுத்தமாயையொடு
சேர்ந்தேவிடுஞ்சீவன் சிற்சிலர்க்கும் பூரணமே
(140)
ஒயாவிவகரிப்பேயோ ரொருவர்க்குச்சகஜ
மாயிருக்குமிந் நிலையுமந்நிலையே பூரணமே
(141)
மாயாவழுகையொடும் மந்தச்சிரிப்போடும்
தூய சகஜநிலை தோய்வர்சிலர் பூரணமே
(142)
காட்டம் போலாகியந்தக் காலமட்டின் நிற்குமுடற்
றேட்டவிதுவுஞ்சிலர் சகஜம் பூரணமே
(143)
நின்னடியார் பூசைசெய்ய நேர்ந்திடுமேற்கிட்டாத
தென்னுளது நீயுமிதிலமைவாய் பூரணமே
(144)
வேண்டாதவொன்றை மிகத்தருவாய்என்றனுக்கு
வேண்டியதைக் கேட்கில்விளம்பாயென் பூரணமே
(145)
ஆங்காரமான திரண்டற்றவிடமே சகஜம்
ஆங்காரம்போவதற்கே யாயுளில்லை பூரணமே
(146)
உள்ளபடியாகுமென வோர்நிலைமை பற்றிடலுங்
கள்ளமனச் சடலங்கண்டுதான் பூரணமே
(147)
லிங்கஜலனம் போலேலிங்கத்தினிச்சலமு
மங்கதர்மந்தானே யமைவதுவரம் பூரணமே
(148)
இவ்விடத்தினிற் கவெனயாம்புகன்ற வக்கணமே
அவ்விடத்தினிற்கும் நெஞ்சமற்றதுவாம் பூரணமே
(149)
தன்னையுணர்ந்தபின்னுஞ் சாதனங்கள் செய்தபின்னு
மன்னுமுத்தியின் பெருமைவந்தடையும் பூரணமே
(150)
கடையிற்கனியுமுண்டு கையதனிற்காசுமுண்டு
நடைநடக்கச் சோம்புவரேனண்ணலெங்ஙன் பூரணமே
(151)
தேகாந்தந்தன்னின் முத்திசேரலாமென்றுசிலர்
கேகாந்தமாகவியம்பினையோ பூரணமே
(152)
இப்பொதிலெங்குமிருக்கின்றாய் முத்தியென்பார்க்
கப்போதிலெந்தவுருவாகிநிற்பாய் பூரணமே
(153)
ஒன்றென்பதொன்று மற்றதென்பற்குமோரிரண்டாய்
என்றுவருமென்பதற்குமேதுவாம் பூரணமே
(154)
ஒன்றுமற்றதொன்றிரண்டு மோங்குபலதென்பதெல்லா
மென்றுமுள்ளநின் கோவிற்கிட்டபடி பூரணமே
(155)
பூரணக்கண்ணி முற்றிற்று