கிளிக்கண்ணி


கிளிக்கண்ணி
ஐந்துகரனுக்கிளைய  வாறுமுகவேலவனைச்
செந்திற்குகந்தவனைக்               
 கிளியே
சேரமனந் தேடுதடி                        
(1)
கூடிக்குலாவிமெத்தக் குகனோடு வாழ்ந்ததெல்லாம்
வேடிக்கையல்லவடி                 
 கிளியே
வெகுநாளைத் தொந்தமடி                 
(2)
நீலமயில்வாகனனால் நெஞ்சக்கரைந்ததன்றிப்
பாலுங்கசப்பாச்சுதே                  
 கிளியே
பசலையும் பூத்ததடி                    
(3)
சேமநிதியாடைபணி சென்றாலுஞ்சிறுதுயர்
காமங்கொடுந்துயரடி                 
 கிளியே
கன்னிகைமார்களுக் கெல்லாம்            
(4)
மாலைவடிவேலவர்க்கு வரிசையாய் நானெழுதும்
ஓலையுங்கிறுக்காச்சடி               
 கிளியே
என்னுள்ள முங்கிறுக்காச்சடி              
(5)
ஊரார் வசைசொல்லவும் உற்றார் வகைசொல்லவும்
வாராத வார்த்தையெல்லாம்         
 கிளியே
வந்து வந்து போகுதடி                     
(6)
ஐந்து வயதினிலே யறியாப் பருவத்திலே
பிஞ்சிலே கூடினானடி               
 கிளியே
பிரியமனங் கூடுதில்லை                   
(7)
வள்ளிக் குகந்தவனை மருவியிருந்த விதம்
கள்ளப் புணர்ச்சியல்லடி             
 கிளியே
கற்பு நிலையப்படியடி                       
(8)
அந்தந்த நாளையினான் அறியாதே கூடிவிட்டேன்
இந்த விதிவருமென்று               
 கிளியே
நான் எண்ணியறிந்தேனில்லை                
(9)
எல்லார்க்கு மொருவிதம் எனக்கொருவிதமடி
வல்லார்க்கும் வல்லவனாம்           
 கிளியே
மான் மருகன்றந்தமையால்                
(10)
எட்டாப் பழமடியோ இறக்காதனடியோ
வட்டாத வானந்தமே                 
 கிளியே
மான் மருகன்றந்த சுகம்                    
(11)
கட்டும் பொருளுமற்றுச் சும்மா விருக்கவைத்தான்
எட்டிரண் டுமறியேனடி               
 கிளியே
ஏமாந்திருந் தேனடி                       
(12)
மோகந்தவிர வென்னை முந்தி பிடித்திழுத்து
ஏகவெளி தனிலே                    
 கிளியே
என்னைக் கலந்தானடி                  
(13)
வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளங் குழையுதடி                  
 கிளியே
ஊனு முருகுதடி                          
(14)
எட்டி யெட்டிப்பார்ப்பவர்க்கு எட்ட எட்ட நிற்குமது
கட்டுக் கடங்காதடி                   
 கிளியே
சுந்தரத்தின் பேருருவம்                     
(15)
கன்னல் மதுரமொழிக் கட்டழகன் என்குரவன்
என்னபொடி போட்டானோடி            
 கிளியே
இடைபிரியக் கூடுதில்லை                  
(16)
அறிவு என்றானப்பால் அறியறிவுதானென்றான்
பிறிதொன்றுமில்லை யென்றான்        
 கிளியே
பேசாதிருந்தானடி                          
(17)
அலைந்து திரிபவர்க்கு ஆசையுண்டு தாபமுண்டு
கலந்து சுகிப்பவர்க்குக்                
 கிளியே
கண்ணீரும் வருமோடி                      
(18)
கானமயிலேறு மென்றன் கட்டழகன்றந்து வரும்
ஆனந்த மென்பதெல்லாம்              
 கிளியே
அழுது தவிப்பதோவடி                     
(19)
உண்டாற் கிறுக்கவைக்கும் ஊரிலுள்ள கட்சரக்கு
கண்டாற் கிறுக்கவைக்கும்             
 கிளியே
என் கட்டழகன் பேருருவம்                 
(20)
தாழ்வாரைக்கை தூக்குந் தம்மனைக்குள்ளேயிருந்து
வாழ்வாரை வாழ்த்துமடி               
 கிளியே
மான் மருகன்றன் கருணை                  
(21)
எட்டும் வரைக்குந்துன்பம் எட்டிவிட்டாற் பேரின்பம்
தட்டினாலும் போகாதடி                
 கிளியே
தானாயறிந்ததடி                            
(22)
மணத்தகுழலிருந்தென் மற்றவழகிருந்தென்
குணந்தான் குறியடியோ               
 கிளியே
என் கோலமயில் வாகனற்கு                 
(23)
சொல்லாத சொல்லும்வரும் துறவாத்துறவும் வரும்
கல்லாத கல்வியும்வரும்              
 கிளியே
என் கணவரைக் சேர்ந்தவர்க்கு              
(24)
என்னோடுடன் பிறந்தா ரெத்தனையோபேர்கள் பட்டார்
அத்தனை பேர்கள் பட்டுங்             
 கிளியே
அவனாசை போகுதில்லை                   
(25)
மாடுமனை போனாலென்னமக்கள்சுற்றம் போனாலென்ன
கோடிசெம்பொன் போனாலென்ன        
 கிளியே
அவன் குறுநகை போதுமடி                  
(26)
முத்து நகைக்குமவன் மோனமொழி வார்த்தைகட்கும்
பித்துப் பிடித்தேனடி                   
 கிளியே
பேசுதற்குக் கூசுதடி                        
(27)
ஆடுமயில் வாகனனாலன்று முதற்பட்டதுயர்
ஏடுமடங்காதடியோ                    
 கிளியே
எல்லாமெழுதவென்றால்                   
(28)
என்னைக்கெடுத்தான்பின் என்னைத்தானென்றுசொன்னான்
தன்னையுங்கெடுத்துக் கொண்டான்       
 கிளியே
ஷண்முகத்தான் மாயவித்தை               
(29)
பக்தியுள்ள பேர்களுக்குப் பயன்றரும் பொருளது
முக்திபெற்ற பேர்கட்கெல்லாம்          
 கிளியே
மூடிவைக்குஞ் செம்பொருளது                
(30)
ஊனம் வருமென்றறியேன் உள்ளுக்குள்ளே கலந்தேன்
மானம்பறி போச்சடி                   
 கிளியே
மற்றவருக் கேச்சாச்சடி                     
(31)
அஞ்சியொடுங்கி நின்றேன் அழுது சலித்துநின்றேன்
பஞ்சுபடு பாடுபட்டேன்                 
 கிளியே
என் பாக்கியத்தைக் காணவென்று              
(32)
கொஞ்சியிருப்பார்கள் குழலைமொழி மாதரெல்லாம்
அஞ்சியிருப்பேனடி                    
 கிளியே
என் ஆறுமுகவேலவர்க்கு                   
(33)
மோகம் மெத்தவானாலும் முன்னும் பின்னும் பார்த்து
ஏகாந்தவேளையிலே                   
 கிளியே
என் குறையைச் சொல்வேனடி               
(34)
மதியாதொருவார்த்தை வாயிருத்து வந்து விடும்
எதிர்த்தொன்றும் சொல்லாரடி           
 கிளியே
என்றன் மட்டும் சொந்தமடி                 
(35)
சீவிச்சிணுக்கெடுப்பார் சிந்தூரப்பொட்டிடுவார்
மேவியிருந்திடுவார்                   
 கிளியே
விகற்பமொன்றுமில்லையடி                 
(36)
வைவேன் பிணங்கிடுவேன் மறுத்துமறுவிடுவார்
பொய்மட்டுங் கூடாதடி                
 கிளியே
என்பொன்னின் வடிவேலவற்கு               
(37)
பேசியிருக்கின்றார்கள் பித்தமுதனோய்களுக்கு
ஆசைக்கொருமருந்தைக்               
 கிளியே
அங்கெழுதிவைத்தாரில்லை                  
(38)
சரியா யெழுதிவந்துந் தங்கவடிவேலரென்னைப்
பிரியாவெழுத்தெழுதக்                 
 கிளியே
பிரமன் மறந்தானடி                        
(39)
இரண்டு என்றானப்பால் இரண்டு மொன்றாமென்றான்
ஒன்றென்றுமில்லை யென்றான்         
 கிளியே
உணர்வுதெரியுதில்லை                     
(40)
தாரணியோர்மெச்சத் தனியரசுசெய்து வந்தேன்
சீரலைவாய்வந்ததனால்                
 கிளியே
என் சீரலைவாயாச்சுதடி                   
(41)
ஏகம்பேதமுனக் கின்று மென்றுமானாலும்
தேகமிருக்கும் மட்டுங்                 
 கிளியே
சேர்ந்து சுகித்திரென்றான்                  
(42)
ஆதரவாய்க்கூடிடினும் அங்குபிரிந்திடினும்
பேதமற்று வாழ்வதுவே                
 கிளியே
பெருவாழ்வு என்றுசொன்னான்              
(43)
நான் பேதையாதலினால் நாதனென்ன சொன்னாலும்
பேதமென் றெண்ணேனடி               
 கிளியே
பேதமிருக்காதடி                          
(44)
சேர்க்கையிலென் கணவன் திடமென்ன சொன்னாலும்
ஏக்கமெடுக்குதடி                      
 கிளியே
என்புமுருகுதடி                            
(45)
விட்டுத்தான் சொல்லுகிறேன் மெள்ளமெள்ளப்பித்தேற்றிக்
கட்டுக்குலைத்தானடி                   
 கிளியே
கண்டவருக்கேச்சாச்சடி                     
(46)
கட்டுக் கொடிபடர்ந்த கருவூருக்காட்டுக்குள்ளே
விட்டுப்பிரிந்தாரடி                     
 கிளியே
வேலவர்க்குச் சொல்வதெவர்                
(47)
சார்பிலிருப்பேன் சலிப்புவந்தாலென் கணவர்
மார்பிற்றுயின் றிடுவேன்               
 கிளியே
மயங்கவுமாட்டேனடி                       
(48)
எல்லாரைப் போலமனத் தெண்ணமற்று வாழ்ந்திடலாங்
கல்லா திருந்தேனில்லை               
 கிளியே
கற்று மென்னகண்டேனடி                   
(49)
வைவேலெடுத்த வென்றன் மன்னனையல்லாதெவையும்
பொய்யாகத்தோற்றுதடி                
 கிளியே
பொருத்தமுமில்லையடி                    
(50)
தன்னையறிந்தாற் றனியாகாதானாலும்
மன்னர்மறந்திடலாமோ                
 கிளியே
வழக்கிடுங் காரியமோடி                   
(51)
எண்ணாதவெண்ணி யெண்ணி யீடழிந்துபோவதற்குப்
பெண்ணாய்பிறந்தேனடி                
 கிளியே
பிறக்குமுன் செய்தவினை                  
(52)
கூடிச் சுகங்கொடுத்த கொற்றமயில் வாகனனாற்
பாடும்புலவர்கையில்                  
 கிளியே
பட்டோலையானேனடி                      
(53)
வாடியிருப்பானேன் வலியவேநங் கணவர்
தேடிவருவாரென்று                    
 கிளியே
திடமும் பிறக்குதில்லை                   
(54)
பர்த்தாமனைவியென்று பாடும் பழக்கமெல்லாங்
கர்த்தாவின் சீரடியோ                  
 கிளியே
கருத்தில் வேறெண்ணாதபடி                 
(55)
என்னைமருட்டவென்று ஏன்றமட்டும் பார்த்துவந்தாய்
உன்றன் மருட்டுக்குள்ளே              
 கிளியே
உலகமிருக்குதடி                          
(56)
ஆறுமுகம் போற்றாமல் ஆருமிங்கே வாருமென்று
கூறுந்திருவாய்முத்தங்                
 கிளியே
கொண்டினிவாழ்வதென்று                  
(57)
என்னோடுநீயும் இணங்கியவரைக்கலந்தும்
உன்குணம் வேறாச்சடி                
 கிளியே
உனக்குத் தெரியுதில்லை                   
(58)
எனக்குச்சலிப்புமுனக் கெக்களிப்பு மாயிருந்தால்
மனத்துயர் போவதென்று              
 கிளியே
மன்னர் மகிழ்வதென்று                     
(59)
மனக்கிளி நீயொருமறுவற்ற பெருங்கிளி
சின்னக்கிளியானயடி                  
 கிளியே
சேர்க்கையின் தோஷத்தினால்               
(60)
ஒருவருமறியாமல் உள்ளுக்குட் கூடியதைத்
தெருத்தோறுந் தூற்றுகிறாய்            
 கிளியே
செல்வரென்ன வெண்ணாரடி                 
(61)
ஆசைக்கணவர் சொன்ன அந்தரங்கச் சொல்லதனைப்
பேசிவிட்டோமென்றெண்ணுறாய்        
 கிளியே
பேசுதற்கும் வாராதடி                      
(62)
வேண்டியென்ன சொன்னாலும் மிஞ்சுகிறாய் நீயும்நானுந்
தோண்டியுங்கயிறுமடி                 
 கிளியே
சொல்லியுந் தெரியுதில்லை                
(63)
எண்ணமுடிவதெல்லாம் இந்தவுடலிற்போனால்
இந்தவுடலே வருமென்று              
 கிளியே
யாருனன்குச் சொன்னாரடி                  
(64)
தன்னிற்றிடம் பிறந்தார் சத்தசத்தென்பதில்லை
சின்மயமென்பதில்லை                 
 கிளியே
திரிபுடியுமில்லையடி                       
(65)
சுட்டிடுவாரவ்விடத்திற் றூங்கிக் கிடந்திடுவார்
எட்டி யெட்டிப்பார்த்திடுவார்            
 கிளியே
இருக்குந்திரிபுரியடி                        
(66)
கீழிருந்தே போகவேணும் கிட்டிவிட்டால் மேற்குதித்துத்
தாழ்வில்லா நிலையில்நிற்குங்          
 கிளியே
சமர்த்தேசமர்த்தடியோ                     
(67)
இப்படியப்படிநா னிருந்திடவேணுமென்ற
தப்பிதவெண்ணமெல்லாங்              
 கிளியே
சற்குருமுன் நில்லாதடி                     
(68)
மனமொன்று சாக்ஷியொன்று மற்றதெல்லாம் நெடுவழி
மனம்போனாற் சாக்ஷியென்ற           
 கிளியே
வார்த்தையும் போகுமடி                    
(69)
இனிமேற் பிறப்பதனை யாரறிபவர் அதனால்
யாரும் பிரமமென்னக்                 
 கிளியே
இயம்பிடலாமோவடி                       
(70)
மரிப்பாரொருவரன்றி மனஞ்சஞ்சரித்ததென்றால்
மனம்போன விடமதுவே               
 கிளியே
மாமவுன மாகுமடி                         
(71)
பாடுவதும் ஆடுவதும் பரநிலை கூறுவதுந்
தேடுவதுங் கூடுவதுங்                 
 கிளியே
சிந்திக்கிலகமேயடி                        
(72)
இரவு பகலாகும் ஏந்திழையாரர் மோகமுற்றால்
பகலிரவாகுதேயடி                    
 கிளியே
பாவியென்ன செய்வேனடி                   
(73)
அறுநான்கிற் கல்விபெற்றேன் அப்படியப்படித்தான்
எழுநான் காமாண்டினிலே              
 கிளியே
என்னையறிந்தேனடி                       
(74)
ஒருசொல் சொன்னாலதற்கே யுயிர்விடவேணுமப்பாற்
பலதரஞ்சுட்டிச் சொல்லியுங்            
 கிளியே
பாவியுயிர் போகுதில்லை                   
(75)
கண்கொடுத்து வாழவைத்த கண்மணியோடேகூடி
எண்ணமெல்லாம் முடியாவிட்டால்      
 கிளியே
என்குலத்திற்கேவசையடி                   
(76)
பெரும்பாவி மாதேவன் பேருறுப்பெல்லாம்படைத்து
உருகாமனமதொன்றைக்               
 கிளியே
ஊடேபடைத்தானடி                        
(77)
பத்தஞ்சுவைத்திருக்கும் பாக்கியத்தினாலல்ல
உத்தமர் தஞ்சேர்க்கையினால்          
 கிளியே
ஒன்றையுமதியேனடி                      
(78)
அண்ணலை நினைக்கும் போதாறாகநீர் பெருகும்
கண்ணுக்குத்தான் சுபாவமோ           
 கிளியே
கள்ளக்கண்ணீரோவடி                      
(79)
கள்ளங்கபடுவைத்தே கவல்கின்றேனழுகின்றேன்
உள்ளங் கனிந்ததென்றால்             
 கிளியே
உத்தமரறியாரோடி                        
(80)
அன்பு பெருகவவன் அன்று சொன்னதைநினைந்தால்
என்புகுளிருதடி                       
 கிளியே
என்னென்னவோ தோணுதடி                 
(81)
ஆகமெல்லாம் நோவுகின்ற தவன்றந்தமையல்மிஞ்சி
முகத்திற் கண்ணீர்வருகுதே            
 கிளியே
மூச்சுமொடுங்குதடி                         
(82)
சீராளன் என்குடிச் செல்வனவன் றிருவாயை
வாரிமுத்தங் கொள்வதற்குக்           
 கிளியே
வாயிதழ்துடிக்குதடி                        
(83)
உருவமுமென் கணவனுருவல்லா வுருவைப்போற்
பரமசுகவடிவமே                      
 கிளியே
பாலுந்தேனும் போலவடி                    
(84)
நிமிஷம்யுகமாமென்பர் நேரிழையா ரெல்லாரும்
அதுவோரளவு பட்டதே                
 கிளியே
அப்படியுமில்லையடி                       
(85)
அரைக்கணம் வீண்போக்கேன் அப்படியே வாழ்ந்து
மருவாவொரு நாளோடே               
 கிளியே
வந்தேன் வாணாளும் போகுதடி              
(86)
விட்டுப் பிரிந்தாரென்றும் விடாமலேயெப்போதுந்
தொட்டேயிருக்கின்றா ரென்றுங்         
 கிளியே
துணிந்து சொல்லப்படுவதில்லை             
(87)
கனவு நனவாகும் கைகலந்தாற் போற்களிப்பார்
நனவுகனவாகுதே                     
 கிளியே
நானினியேது செய்வேன்                    
(88)
நான்போனால் நீபோவாய் நானிருந்தால் நீயிருப்பாய்
நான்தானே போய்விடுவேன்            
 கிளியே
நாணந்தலைகுனியுதே                     
(89)
நம்முடைய சொல்லவன்சொல் நந்தொழிலவன்றொழில்
நம்மாசை யவனாசையே               
 கிளியே
நாமெனுமகம் போய்விட்டால்               
(90)
ஓயாத்துயர் தனிலும் உயிர் போனாற்றேவையில்லை
பாய்ந்து விடுவோமென்றாலுங்          
 கிளியே
பாக்கியத்தினுயிரடியோ                    
(91)
கருக்கொண்ட தென்றுவன்றே கணவன்நானென்று
உருக்கொண்டு நின்றாலல்லவோ        
 கிளியே
ஊடலெல்லாந் தீர்த்திடலாம்                 
(92)
சாருந்தொழில் கட்கெல்லாஞ் சாடைசெய்கின்றான் தன்னைக்
கூர்ந்தறியும் புத்தியில்லையே          
 கிளியே
கொடும்பாவி யென்னசெய்வேன்              
(93)
கண்டோர்க்குப்பேரிழிவு கலந்தார்க்கு இன்பநிலை
கொண்டாரைத் தெய்வமென்று          
 கிளியே
கோடிமறை கூப்பிடுதடி                     
(94)
இதைச்சதமென்று கண்டோர்க் கேயது தெரியாதென்றால்
அதைச்சதமென்று கண்டோர்க்கு        
 கிளியே
அவனிதெரியுமோடி                        
(95)
வேதத்தின் சாகைகட்கு மேலானானாதலினால்
விசாகனெனப்பெயர் கொண்டான்        
 கிளியே
வேலெடுத்தமூலகுரு                       
(96)
எங்கும் நிறைந்திருப்போன் எட்டியுமெட்டாதிருப்போன்
குங்கும வர்ணனடி                    
 கிளியே
என் குமரப்பெருமானடி                    
(97)
வள்ளிக்குகந்தவன்றான் மறையின்முடிவில் வந்தான்
புள்ளிமயிலூர்ந்தானடி                 
 கிளியே
போக்குவரத்தில்லானடி                     
(98)
கண்ணன் கரிமுகவன் கபாலியேமுதலாம்
எண்ணரிய தேவரிவனே               
 கிளியே
எமதாயி சத்தியிவனே                      
(99)
நீ நானெனும்போது நினக்கர்த்தமானாலது
தானே நிர்வாணமென்று                
 கிளியே
சற்குருமுன் சொன்னாரடி                  
(100)
இங்குமங்கு மெங்குமுள்ள தேகரசவானந்தம்
அங்கமுமனந்தமென்றால்              
 கிளியே
அவதூதமாகுமென்றான்                    
(101)
மாமயிலோன் வாழ்க நாம் வருந்தாதுவகைதந்த
நீமனமே வாழ்ந்திருப்பாய்              
 கிளியே
நீடுழிகாலம்வரை                          
(102)
கிளிக்கண்ணி முற்றிற்று

No comments:

Post a Comment