முகப்பு


கிளிக்கண்ணி சுவாமிகள்
எனப் போற்றித் துதிக்கப்படும்
ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகள்
(1825 - 1871)
அவதார மகிமை

ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகள் துதி

கற்பராயறிவுகற்று நூல்கள் பல கற்குமவ்வழி விருப்புடன்
நிற்பராயுலகின்மிக்கு வாழுநற் நெருங்கவுஞ் சிறுநெறிக்குழா
மெற்பரா முகமறட் துணிட்தருளவென்று பூவில்வருமெம்பிரான்
சுப்பராயகுரு சரணநாளுமுடிசூடுவார் கழல்கள் சூடுவாம்
                      
                      - ஸ்ரீ உருத்திரமூர்த்தி கவிராயர் பாடியது (19 ஆம் நூற்றாண்டு)   

குரு வணக்கம்

இராகம் – பூபாளம் ; தாளம் – திரிபுடை

பல்லவி

சுப்பராயகுரு பொற்பத மனுதினந்
துதித்து நான் பணிவேனே

அனுபல்லவி

கற்பனைகள் கடந்தசிற்பரம் பொருளினைக்
கையில் நெல்லிக்கனிபோல் மெய்யடியார்க்குதவும்
(சுப்பராய)
சரணம்

1.    அரிய மறையினாமுந்தெரிய நின்றுதிகைக்க
      உரிய கருணையாலே விரியும் புவியில்வந்து
      கரிய மாய்கையிற் சிக்கித்திரியுமெனையருளாற்
      காட்சிக்கரியதொரு சாட்சி நீயெனச்சொன்ன
(சுப்பராய)
2.    பொன் றுமுலக வாழ்க்கையென்று மெய்யெனநம்பி
      நன் றுதீதறியாது நின்றஎனையருளாற்
      துன்றுடு கனகசபைநின்று நடம்புரியுந்
      தூக்கியபாதத்தை நோக்குந்தரத்தில்வைத்த
(சுப்பராய)
3.    ஆரணம் புகழ்பரி பூரணந்திரிபத
      காரணமுயர் ஞான தாரணமெனவோதி
        நாரணனயன் வெள்ளைவாரண னிவர்தன்னில்
      நாடிநாடி நிற்கத்தேடி யெனக்கருள்செய்
(சுப்பராய)
 ************     

இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்  அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்தின் கிழக்கே வற்றாத நதியான தாமிரபரணி நதிக்கரையில் தெற்கு சங்கரன்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோவிலின் முன்புறம் ஈசான்ய திக்கில் ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
19 ஆம் நூற்றாண்டு 1825 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் “கொத்தவால்” பதவியினை வகித்து வந்த திரு. சங்கரப்பன் என்பார்க்கு திருமகனாக சுவாமிகள் அவதரித்தார். சுவாமிகளுக்கு “சுப்பராயன்” என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
சுவாமிகள் தனது பாலப் பருவத்தின், ஐந்து வயதிலேயே நீலமயில் வாகனனை வள்ளி மணாளனை தகப்பன்சுவாமியான முருகப்பெருமானால் ஈர்க்கப்பட்டு அவருள் கரைந்து மெய் மறந்து வணங்கி நின்றார். சுவாமிகள் தனது 24 ஆம் வயதில் ஞானக்கல்வி பெற்றார்.
பிரம்மா அன்னப்பறவை மீது ஏறியும், விஷ்ணு வராக அவதாரம் எடுத்தும் காண முடியாத தலையையும், திருவடியையும் கொண்ட சிவபெருமானின் மைந்தன் முருகப்பெருமான் மீதுள்ள அளவுகடந்த அன்பால், பக்தியால் இடைவிடாத தியானத்தில் ஆழ்ந்தார். தன்னிடமுள்ள லட்சக்கணக்கான செல்வத்தை பசித்தவர்க்கும், தொழுநோயருக்கும், ஆதரவற்று இறப்போர்க்கு ஈமச்சடங்கு செய்யவும், ஊமைக்கும், கோயில் திருப்பணிக்கும், துறவிகளுக்கும், மெய்யடியார்க்கும் அளித்து வந்தார். இல்லறத்தில் இருந்தபடியே நாள்தோறும் இவ்வாறாக வாரி வழங்கி வள்ளலாய் வாழ்ந்து வந்தார்.
முருகப்பெருமான் மீதுள்ள பக்தியால், ஞானத்தால் தன்னையறிந்து மனைவி, மக்கள், சுற்றமும் பொய்யென அறிந்து, முக்தியடைய வழிகளை உணர்ந்து உணவு குறைந்து, உறக்கமுமின்றி கந்தனைத் தவிர வேறதையும் நினையாமல் உருகி நின்றார்.
தனது 28 ஆம் வயதில் தன்னுள் தன்னையறிந்து துறவு மேற்கொண்டார்.
சுவாமிகள் தன்னுடைய 24 ஆம் வயதில் ஞானக்கல்வி பெற்றதையும் 28 ஆம் வயதில் தன்னையறிந்ததையும் அவர்களுடைய கீழ்க்காணும் கிளிக்கண்ணி மூலமாக அறிய வருகிறோம்.
           அறுநான்கில் கல்வி பெற்றேன் அப்படியப்படித்தான்
           எழுநான் காமாண்டிலே                      கிளியே
           என்னை அறிந்தேனடி         (கிளிக்கண்ணி – 74)
பல கதா பிரசங்கங்களால் ஆன்மிக சொற்பொழிவுகளும், நாமாவளிகளும், நல்ல லாவணிகளும், உணர்தற்கரிய பருவதவிலாசக் கோவை (108 பாடல்), குருபராபரணம் (51 பாடல்), மகா அமிர்தமான குகானந்தலகிரி (51 பாடல்) மற்றும் குமரபோதம் (100 பாடல்), ஆனந்தக்களிப்பு (11 பாடல்), திருப்பரங்குன்றப் பதிகம் (11 பாடல்), பூரணக்கண்ணி (155 பாடல்), தன்னையே வளர்கிளியாக பாவித்து இனிய இசையுடன் கிளிக்கண்ணி (102 பாடல்), கழுதைக்கண்ணி ( 22 பாடல்), திருவாசிரிய விருத்தம் (31 பாடல்), திருச்செந்தூர் பதிகம் ( 10 பாடல்), கழுகுமலைப் பதிகம் (12 பாடல்), கீர்த்தனைகள் எனப் பல பாடல்களைப் பாடி பாமர மக்களை பக்தியில் மூழ்கச் செய்தார்.
நாளடைவில் கதா பிரசங்கங்களுக்கும் ஆன்மிக சொற்பொழிவுகளுக்கும் தன்னுடைய சீடர்களை சுவாமிகள் அனுப்பினார். சீடர்கள் பல ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்திவருகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு ஊரில் சொற்பொழிவில் நல்லொழுக்கத்தை பற்றி கூறும் போது ஒரு பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்து கதையை மற்றும் கூறுங்கள் அறிவுரை வேண்டாம் என்று அபவாதம் செய்தார். இச்சம்பவத்தை சீடர்கள் சுவாமிகளிடம் வந்து கூறினார்கள். அடுத்த முறை அந்த ஊரின் சொற்பொழிவுக்கு சுவாமிகளே நேரில் சென்று அங்கு கழுதைக்கண்ணி என்கிற தலைப்பில் இருபத்திரண்டு பாடல்களை அருளினார்.
சுவாமிகளின் சொற்பொழிவுகளாலும், பாடல்களாலும் அவரைப் பின்பற்றி வந்த பக்தர்களுக்கு அவர்வர்தம் வாழ்க்கையை செம்மையாக நடத்திட வழிகாட்டினார்.
சுவாமிகள் திருநெல்வேலி மட்டுமில்லாது தான் சென்ற எல்லா இடத்திலும் மக்களின் மனத்தை பக்தி வழியில் திருப்பினார். எல்லா உயிரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறினார். சாதி வேறுபாடு பார்த்தல் மற்றும் தெய்வங்களின் பெயரில் பலியிடுதல் போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று பல எதிர்ப்புகளிடையே வலியுறித்திக் கூறினார்.
சுவாமிகளிடம் அவருடைய சீடனான திரு. பூமிநாதன் காசிக்கு சென்று வர அனுமதி கோரினார். அதற்கு சுவாமிகள்  1871 ஆம் ஆண்டு  நாற்பத்தி ஆறாம் ஆண்டு (தன் வயது) ஆடித்தபசு, பொளர்ணமி, உத்திராடம் கூடும் திருநாளில் இருபத்தாறு நாழிகை சமயம், யாம் குருபரன் திருவடி கூடுவோம் என்று அறிவித்து அதன்பின் காசிக்கு செல் எனக் கூறினார்.
இச்செய்தி நாடெங்கும் பரவிட, அனைத்துப் பகுதிகளிலுள்ள பக்தர்களும் தரிசிக்க வந்த வண்ணம் இருந்தார்கள்.
குறிப்பிட்ட நாளில் / குறிப்பிட்ட நேரத்தில் ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகள் மீது அன்பும், பக்தியும் கொண்ட சீடர்களும், பக்தர்களும், அறிஞர்களும் அவரை தரிசிக்க வந்தார்கள். கூடியிருந்தோர் பல நாமங்களை பக்தியால் ஜெபிக்கவும், பிடில் வீணையும், பெரிய மேளங்களுடைய நாதங்களுடன் பாடி பூமாரி பொழியும் வேளையில் பரம மகிழ்ச்சியுடன், குழியில் அமர்ந்தபடியே கூடும் சமாதியைக் குறிப்பால் காட்டி மிருத்யு அணுகா வண்ணம் மிருதுபாஷ்யம் 32 பாடல்களை மணிப்பிரவாள நடையில் திருவாய் மலர்ந்து அருளி ஜீவசமாதியானார். இன்றளவும் அருள்பாளித்து வருகின்றார்.
சுவாமிகளின் பாடல்களை படித்த ஒரு சாது கூறியது யாதெனில், நான் படித்தவரை முக்தியை பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை.அவர் கூறியதலிருந்து
தானும் போய்
எதிரும் போய்
தானும் எதிரும் போயினது
என்ற அறியா நிலையே
முக்தியாம்
               
நிகழ்வுகள் ஆதாரம்:
1.    ஸ்ரீ சத்குரு சுப்பராய சுவாமிகளின் பாடல்கள். கிளிக்கண்ணி, பூரணக்கண்ணி,
     மிருதுபாஷ்யம் போன்ற பல பாடல்கள்.
2.    சுவாமிகளின் திருமகன் மற்றும் சீடன் ஆகிய திரு. சு. ஆழ்வார்சாமி
     எழுதிய பாடல். (1930ம் ஆண்டு).